நமது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும்|இதுவும் கடந்து போகும் !



ஓர் அரசர். அவருக்கு வயதாகி விட்டது. அதனால் கவலை , பயம் எல்லாம் அதிகரித்துவிட்டன. இரவில் உறங்க முடியவில்லை. ஏற்கனவே போர்க்களங்களில் எத்தனையோ பேரை ஓட ஓட விரட்டியவர். ஆனாலும் இப்போது அந்த துணிச்சல்கள் எல்லாம் எங்கேயோ போய்விட்டன. என்ன செய்யலாம் என்று யோசித்து எல்லா அமைச்சர்களையும் கூப்பிட்டார்.

எனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்கள். எனக்கு ஒரு நெருக்கடியான சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது . அந்த நேரத்தில் நீங்கள் யாரும் என் பக்கத்தில் இல்லை ஆலோசனை சொல்வதற்கு. அந்த சமயத்தில் எனக்கு உபயோகப்பட கூடிய மாதிரி ஒரு பொன்மொழி சொல்லுங்கள். நான் அதை என்னுடைய வைர மோதிரத்துக்கு அடியில் பதித்து வைத்துக் கொள்வேன் என்றார்.

அவர் போட்டிருந்த மோதிரமும் அதற்கு தகுந்த மாதிரி திறந்து மூடுவது போல் இருந்தது. அமைச்சர்கள் யோசனை பண்ணினார்கள்.
ஒருத்தருக்கும் ஒன்றும் தோணவில்லை. குழப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு முனிவர் அங்கு வந்தார்.


அவர் சொன்னார் நான் அதற்குப் பொருத்தமாக ஒரு வாக்கியம் சொல்லுவேன் .ஆனால் ஒரு நிபந்தனை.ஆர்வம் காரணமாக அவசரப்பட்டு அதைப் படிக்கக் கூடாது. அது ரகசியமாகவே இருக்க வேண்டும். எப்போவாவது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டால் வேறு வழியே இல்லை என்கிற நிலையில் மட்டும் தான் அதை திறந்து படிக்க வேண்டுமென்றார். அரசரும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

அவர் சொன்ன வாக்கியத்தை இரகசியமாக மோதிரத்தில் பதித்து ராஜாவிடம் கொடுத்தார். கொஞ்ச நாள் கழித்து அந்த ராஜாவுக்கு ஒரு சோதனை வந்தது.அடுத்த நாட்டு மன்னன் படையெடுத்து வந்தான். அவரிடம் ஏற்கனவே தோற்றுப் போனவன் அதனால் வெறியோடு போரிட்டான். இவர் நாட்டை இழந்தார். 

எல்லாவற்றையும் இழந்தார். ஒரு அடிபட்ட குதிரையில் ஏறி தப்பித்து போய்விட்டார்.அவனோ பின்னால் துரத்திக் கொண்டு வந்தான். ராஜாவும் ஒரு மலை உச்சிக்குப் போய் விட்டார். அதற்கு அப்பால் போகமுடியாது. பயங்கர பள்ளம். அரசருக்கு திரும்பவும் முடியாது. அவ்வளவு குறுகிய பாதை . சாவு பயணத்தின் வாசலுக்கு வந்து விட்டோம் என எண்ணினார் ராஜா. வேறு வழியே இல்லை.

அந்த நேரம் சூரிய ஒளி மோதிரத்தில் பட்டு மின்னியது. உடனே இவருக்கு ஞாபகம் வந்தது. மோதிரத்தை திறந்து படித்தார். அதில் இருந்த வாசகம் " இதுவும் கடந்து போகும் ! ( This too will pass away ) அவருக்கு ஒரு தைரியம் வந்தது. பின்னால் துரத்தி வந்தவர்களும் திசைமாறி எங்கோ. சென்று விட்டார்கள்.

அவர்கள் விரட்டிக் கொண்டு வராவிட்டால் இவ்வளவு அழகான ஒரு இடம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு அழகை ரசிப்பதற்காக நாட்டையே துறக்கலாம் என்று அவருக்கு தோன்றியது.அமைதியாக அழகை ரசித்தார் .எதிரிகள் எல்லாம் எங்கேயோ போய்விட்டார்கள்

பின்னர் எப்படியோ. தப்பித்து. நாடு திரும்பினார். மறுபடியும் படைகளை திரட்டினார். கொஞ்ச நாளில் படையெடுத்து யாரிடம் தோற்றாரோ அவரையே வெற்றிகொண்டு திரும்பி வந்தார்.

வரவேற்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆடல் பாடல் எல்லாம். இதை பார்த்ததும் அந்த ராஜாவுக்கு தலைகால் புரியவில்லை. நம்மளை இனிமேல் யாராலும் ஜெயிக்க முடியாது என்று நினைத்தார். அகம்பாவம் லேசாக எட்டிப் பார்த்தது.


இப்போது மறுபடியும் சூரிய ஒளிபட்டு மோதிரம் மின்னியது. அதை திறந்து மறுபடியும் படித்தார். " இதுவும் கடந்து போகும் ! ( This too will pass away ) அவ்வளவுதான் அவர் மனம் அடங்க ஆரம்பித்தது. ஆணவம் அகன்றது.

இதேபோல் தான் நமது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் நாம் துன்பம் வந்தது என்று அதிகம் கவலைப்படவோ மிகப் பெரிய சந்தோஷங்களை அதிகம் கொண்டாடவோ தேவையில்லை. அப்போதெல்லாம் இந்த வாக்கியத்தை நினைத்துப் பார்த்தாலே நம் மனம் அமைதி அடையும். ஏனென்றால் இங்கே எதுவும் நிரந்தரமில்லை.

இதுவும் கடந்து போகும் ! ( This too will pass away )

கருத்துரையிடுக

0 கருத்துகள்